Lust  – Evolution  – Middle class

*நடுத்தர வர்க்கத்தில் காமத்தின் பரிணாமவளர்ச்சி:*
– ராமு 10/7/2025

இந்த மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை பரிணாமவளர்ச்சி பெற்றுவரும் பல படிநிலைகளை உற்று நோக்கினால் நம் மனித இனம் ஒரே மாதிரியான வடிவம் (pattern) நோக்கி மேலேழுந்து வருவதைப் புரிந்து கொள்ளமுடியும்.

அது என்னவென்றால் நம் மனித இனம் எப்போதுமே *”ஒரு அடர்த்தியை நோக்கி குவிதல் – concentration”* என்ற தன்மையைக் கண்டடையும் விலங்கினமாகவே இருந்து வருகிறோம் என்பது புலப்படும்.

உதாரணமாக, நாம் வேட்டையாடிகளாக இருந்த காலங்களில் இயற்கையாக வளரும் பல கனி வகைகளில் மெல்லிய இனிப்பான பழங்கள் மீது நமக்கு ஈடுபாடு அதிகம் இருந்து இருக்கிறது.

பிறகு நாம் வேளாண் சமுதாயமாக மாறிய பிறகு இனிப்பான பழங்களைத் தேடி அவற்றில் மிகவும் இனிப்பான பழங்களின் விதைகளை விதைத்து நம் இனிப்பு சுவையைக் கூட்டிக்கொண்டு அதற்கு பழக்கப்பட்டுப் போனோம்.

நாட்கள் செல்லச்செல்ல அந்த கூடுதல் சுவையுடன் நாம் விளைவித்த இனிப்பு நமக்கு திருப்தி அளிக்காமல் இன்னும் கூடுதல் இனிப்பை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

அதன் விளைவாக சர்க்கரையை உற்பத்தி செய்து பின் அதுவும் போதாமல் அடர்த்தியான சுவை மிகுந்த ஒரு விழுங்கலில் நமக்குத் தேவையான இனிப்பு சுவையை அடைய refined sugar – சுத்திகரிக்கப்பட்ட இனிப்பு, fructose மிகுந்த பதார்த்தங்கள் என்று பயணிக்கலானோம்.

அவ்வாறு அடர்த்தி மிகுந்த குவிந்த இனிப்பு பதார்த்தங்கள் உண்டு பழகியதால் இன்று “சர்க்கரை வியாதியுடன்” இந்த 400 கோடி ஆண்டுகளான பூமியில் திரியும் ஒரே விலங்கினமாக மாறிப்போனோம்.

ஏனென்று கூர்ந்து நோக்கினால் *நம் மனித இனத்திற்கு ஒரே மாதிரியான செயல்களை திரும்பத்திரும்ப (ROUTINE) செய்வதனால் கிடைக்கும் ஒரே மாதிரி இன்பங்கள் போதுமானதாக, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.*

மேலும் மிக விரைவில் சலிப்படைந்து விடுவது மட்டுமல்லாமல் அதை நோக்கி நம்மில் ஒரு எதிர்ப்பு  மனநிலை மற்றும் உடல் நிலையை – (RESISTANCE) உருவாகி விடுகிறது.

அந்த எதிர்ப்பு மன நிலையில் இருந்து விடுபட அதற்கு முன்னைக்காட்டிலும் அதிக இன்பம் தேவைப்படுகிறது.

( Resistance :உதாரணமாக 250 ml மது சாப்பிடும் ஒருவனுக்கு முதலில் கிடைக்கும் இன்பம் / போதை, நாளாக, நாளாக அதே போதையை அடைய அவன் 300 – 350 ml என்ற அளவில் மது அருந்த வேண்டிய தேவை ஏற்படுவது போல்.)

அதற்கு நம் உடல் / மனம் இரண்டு வகைகளில் தீர்வு காண்கிறது.

ஒன்று, புதுமையான வகைகளை நோக்கி பயணிப்பது – SEEKING NOVELTY.

மற்றொன்று, அடர்த்தியான, குவிதல் – CONCENTRATION நோக்கி பயணிப்பது.

*அதாவது நம் இலக்கு : குறைந்த முயற்சியில் அதிக லாபம் / நீண்ட நேர இன்பம்.*

இந்த மேலே கூறிய நம் இனத்தின் நடத்தை வெறும் உணவுடன் மட்டும் நின்று போவதில்லை. நம் இதே செயல்பாடுகள்  நாம் இயங்கும் அனைத்து தளங்களிலும் – அரசியல், மதம், பக்தி, தலைமை நிர்வாகம், காமம், ஆசை – பிரதிபலிக்கிறது.

சுருக்கமாக நம் செயல்பாடுகள் கீழ் காணும் வடிவமாக (PATTERN) செயல்படுகிறது.

*Routine – Resistance – Diversify / concentration – more resistance – more concentration….*

இந்தப் பதிவில் மேற்கூறிய மனித செயல்பாடுகள் எப்படி “காமம்” என்ற தளத்தில் செயல்படுகிறது, அதுவும் குறிப்பாக நம் நடுத்தர மக்களிடம் எவ்வாறு மாற்றம் நிகழ்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

ஆரம்ப காலங்களில் காம வெளிப்பாடு அல்லது காம உச்சம் அடைவது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஆண் -பெண் நெருக்கம் மற்றும் உடல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது.

காலங்கள் செல்லச்செல்ல அந்த எளிய உடல் சார்ந்த இன்பம் போதுமானதாக இல்லாமல் சலிப்படைந்து ஒரு விதமான RESISTANCE உருவானது.

அந்த RESISTANCE-ல் இருந்து விடுபட நமக்கு CONCENTRATED PLEASURE நோக்கி பயணிக்கலானோம்.

அதாவது, குறைந்த நேரம் செலவிட்டு அதிக நேரம் தெவிட்டாத இன்பம் நோக்கி பயணிப்பது எப்படி என்று சிந்திக்கலானோம்.

அதன் விளைவாக நாம் காமம் சம்மந்தப்பட்ட விளையாட்டு பொருட்கள், இயற்கைக்கு மாறான செயல்பாடுகள், ஓரினப்புணர்ச்சி என்று பலவிதங்களில் நம் இலக்கை அடைய முற்பட்டோம்.

மேலே கூறியவைகளுக்கு அனைவரும் ஆட்பட்டோம் என்று பொதுமைப் படுத்திவிட முடியாது.

நம் போன்ற நடுத்தரவர்க்கம் மேற்கூறியவைகளுக்கு ஆட்படாமல் விலகி நிற்க முயன்றாலும், அவர்களும் உடல் சார்ந்த இன்பம் துய்ப்பதில் இருந்து சற்று விலகி ஆனால் மனிதனின் அடிப்படை குணமான DIVERSIFY / CONCENTRATE என்பதில் இருந்து விலகாமல் அந்தக் காம உச்சத்தை (ORGASM) கீழ் காணும் வகைகளில் துய்ப்பதாக எனக்குப் படுகிறது.

– அறிவு சார்ந்து உச்சம் தொடுவது
– தொழில் அல்லது வேலை சார்ந்து உச்சம் தொடுவது
– சாதனை புரியும் பிள்ளைகளை உருவாக்குவதன் மூலம் உச்சம் தொடுவது
– நுகர்வுப்பொருட்கள் துய்ப்பதன் மூலம் உச்சம் தொடுவது
– மிக ஆடம்பரமான வாழ்க்கை நோக்கி பயணிப்பதன் மூலம் உச்சம் தொடுவது.

சுருக்கமாக சொல்வதென்றால், உடல் சார்ந்த காம உச்சம் அடைவதில் இருந்து அதைவிட அதிக உச்சம் மனம் சார்ந்து அடைவது எப்படி என்பதை நோக்கி பரிணாமம்  கொள்கிறோமோ என்று இன்றைய இளைய சமுதாயத்தை உற்று நோக்கும்போது எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

நன்றிகள்,
ராமு

Leave a comment