Letter to Durai . Vi. Ko

ராமு, சென்னை, 28/3/2024

*அன்புள்ள துரை. வை. கோ அவர்களே,*

உங்களுடைய தேர்தல் பரப்புரையின் போது, தாங்கள் உணர்ச்சி வயப்பட்ட காணொளியைப் பார்க்க நேரிட்டது.

நீங்கள் உங்கள் அப்பாவின் மீது  வைத்திருக்கும் அளவுகடந்த மரியாதை, மற்றும் பாசம் வைத்திருப்பதை பார்த்த போது, நான் ஒரு சாதாரண மனிதனாக உங்களைப் போன்றே கண் கலங்கினேன்.

நாங்கள் ’85-88 களில் கல்லூரியில் படிக்கும் போது, வை. கோ என்பவர் எங்களுக்கெல்லாம் ஒரு பிரமாண்டம். அவர் அன்றைய காலத்து, (இன்றைய காலத்து மோடியை விட) பெரிய மக்கள் நம்பிக்கை நாயகனாக விளங்கிய ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக, பாராளுமன்றத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது போன்ற செய்திகள், பேச்சுத்திறன், போன்றவை கேட்டு வியந்ததுண்டு.

என் நண்பன் வேடிக்கையாக, “எல்லா தலைவர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்து, வாக்குப் பெட்டியை பக்கத்தில் வைத்து எல்லோரையும் பேசச்சொல்லி வாக்குப்பதிவு நடந்தால் வை. கோ முன் அனைத்து தலைவர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்பான். உண்மையும் அதுவே.

ஒரு காலத்தில், தமிழ்நாட்டின் மூன்று முப்பெரும் தலைவர்களில் ஒருவராக, கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே ஒரு தலைவர் வை. கோ மட்டுமே.

அப்பேற்பட்ட சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்த *தங்கள் தந்தை அரசியலில் சோபிக்க முடியாமல் போனதற்கான காரணம் எது என்று தாங்கள் அறிவீர்களா துரை அவர்களே….*

இதே *உணர்ச்சி வசப்படுதல்* என்ற காரணம்தான். அவருடைய பல தவறான முடிவுகள் அனைத்தும் அவர் உணர்ச்சியின் உச்சத்தில் எடுக்கப்பட்டு படுதோல்வியைக் கண்டவை.

*தனிமையில் சிரிப்பவனையும், கூட்டத்தில் அழுபவனையும் உலகம் இரக்கப்பட்டு புறந்தள்ளிவிடும்.*

உங்கள் தந்தை, மற்றும் நீங்கள் அரசியல் தலைவர்களாக உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முனையும்போது நீங்கள் மற்றவர்கள் கண்ணீரை துடைக்கக் கூடிய மன உறுதி மற்றும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களைப் போன்ற சாமானியர்கள் அல்லர் – எல்லாவற்றிற்கும் பொதுவெளியில் உணர்ச்சிவசப்பட.

என்றாவது கலைஞர் கருணாநிதியோ, அம்மா ஜெயலலிதாவோ பொதுவெளியில் அழுது பார்த்திருக்கீறிர்களா?

*மேலே கூறியவை தங்களைப் போன்ற நேர்மையான, திறமையான, நன்கு படித்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் எழுதியதே தவிர தங்கள் தந்தையையோ, தங்களையோ குறை சொல்லும் நோக்கில் அல்ல.*

அதுவும் தாங்கள் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதால், தமிழ்நாட்டைப்போன்ற பன்மடங்கு உள்குத்து, தந்திரம் மிகுந்த அண்டை மாநிலத்தைவரிடம் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்வதில் தங்களைப் போன்ற படித்த, நேர்மையானவர்களின் பங்கு பெரிது என்பதாலும், எங்களைப் போன்றோர் செய்ய முடியாததை நீங்கள் செய்யத் துணியும் போது இது போன்ற உணர்ச்சி வயப்படுவதை தவிர்த்தால் அந்த அமுதம் சிந்தாமல், சிதறாமல் எங்களுக்கு கிடைக்குமே என்ற சுய நலத்தாலும் எழுதப்பட்டதே.

தாங்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று, உங்கள் அப்பாவின் குரலைவிட இன்னும் வீரியம் உள்ளதாக, புலிக்கு பிறந்தது பூனையாகுமா என அண்டை மாநிலத்தவர்கள் வியக்கும் வண்ணம், தாய் பத்தடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாய்கிறதே என்று நாங்களெல்லாம் வியக்கும் வண்ணம் நீங்கள் அரசியலில் அமோக வெற்றிபெற சாமானியனின் வாழ்த்துக்கள்.

ராமு

Leave a comment